அரவிந்த் கெஜ்ரிவால் கைது : நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம் – இந்தியா கூட்டணிக்கு ஆம் ஆத்மி அழைப்பு.!!

டெல்லி: டெல்லி முதல்வரும், “இந்தியா” (INDIA) கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு விடுத்திருக்கிறது.

டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. மனு தள்ளுபடியான உடனே, கைது வாரட்ண்டுடன் கெஜ்ரிவால் வீட்டை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேர ரெய்டுக்கு பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2 மாதங்களில் கைது செய்யப்படும் இரண்டாவது முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆவார். எனவே, அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் ஒன்றிய அரசுக்கு போதவில்லை. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்! ‘இந்தியா’ தக்க பதிலடி கொடுக்கும்” என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இது குறித்து பேசியுள்ள டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவருமான கோபால் ராய்,

“விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஜனநாயக படுகொலை. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை 10 மணிக்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில், சர்வாதிகாரத்திற்கு எதிராக இருப்பவர்கள் யாரா இருந்தாலும் பங்கேற்கலாம். இந்தியா கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும்டி படி அழைக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

நேற்றிரவு கையில் தீ பந்தங்களை ஏந்தி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று இந்த போராட்டம் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக கெஜ்ரிவால் கைது குறித்து பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, “உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் . கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால், கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு ரூபாயை கூட கைப்பற்ற முடியவில்லை” என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.