பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதல்: 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு – கட்டுப்பாட்டு எல்லை அருகே பதற்றம்.!!

ட்டுப்பாட்டு எல்லை அருகே பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.

மே 7 நடந்த இந்தத் தாக்குதலில் சிறிய ஆயுதங்களிலிருந்து கனரக பீரங்கிகள் வரை பயன்படுத்தப்பட்டன. காஷ்மீரின் உரி மற்றும் தங்தார் பகுதிகளிலும் பீரங்கிச் சத்தம் கேட்டாலும், ஜம்முவின் பூஞ்ச் நகரமே மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

1971 இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு முதன்முறையாக இங்கு குடியிருப்பு மற்றும் அரசு கட்டிடங்கள் மீது பீரங்கி குண்டுகள் விழுந்தன. மே 8 அதிகாலையில் இந்திய ராணுவம் ஒரு வீரர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.

பூஞ்ச் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். சாந்தக், லாசனா, சனாய் மற்றும் சத்ரா ஆகிய இடங்களில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு முன்பு பூஞ்ச் மாவட்டத்தில் ஷெல் தாக்குதல்கள் நடந்திருந்தாலும், தற்போது எல்லை நகரத்திற்குள் ஆழமாகவும், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் பீரங்கி குண்டுகள் விழுவது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஜோயா கான் (14), ஜைன் கான் (12) ஆகிய சகோதரர்கள் அடங்குவர். இவர்களது தந்தை ரமீஸ் கான் காயமடைந்தார். சின்டிகேட் சௌக்கில் கடை நடத்தி வந்த அம்ரீக் சிங் (55) மற்றும் ரஞ்சித் சிங் (48) ஆகியோரும் உயிரிழந்தனர். காஸி மொஹல்லாவைச் சேர்ந்த ஏழு வயது மரியம் கொல்லப்பட்டார், அவரது சகோதரி ஈரம் நாஸ் (10) காயமடைந்தார்.

துங்குஸ் கிராமத்தைச் சேர்ந்த விஹான் பார்கவ் (13) என்ற சிறுவனும் உயிரிழந்தான். மெந்தாரின் மன்கோட் பகுதியில் பல்வீந்தர் கவுர் (35) உயிரிழந்தார், அவரது மகள் ரவீந்தர் கவுர் (12) காயமடைந்தார். அமர்ஜீத் சிங் (47), முகமது அக்ரம் (40), ஷகீலா பி (40), முகமது ரஃபி (40) மற்றும் காஸி முகமது இக்பால் ஆகியோரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சுனில் பரத்வால் கூறுகையில், மே 6-7 தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு எல்லை அருகே பீரங்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது. கிருஷ்ணா காட்டி, ஷாபூர், மன்கோட், லாம், மஞ்சாகோட் மற்றும் கம்பிர் பிரம்மணா ஆகிய பகுதிகளிலும் கடுமையான ஷெல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய ஐந்து எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே ஆகிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களாக இதுபோன்ற தாக்குதலைப் பார்த்ததில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 1971 போருக்குப் பிறகு இதுவே இவ்வளவு தீவிரமான தாக்குதல் என்றும், நகரம் முழுவதும் குறிவைத்துத் தாக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.