ஏ.ஆர் ரகுமானின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியரான ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் காவல்துறையினர் வழிநெடுகிலும் நிறுத்தி வைக்கப்பட்டனர். கவரப்பேட்டை – சத்திமேடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

முன்னதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீஞ்சூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுந்தரம் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.