ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மாநில மாநாடு : டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.

சென்னை: ஆள் கடத்தலை தடுப்பது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சென்னை அசோக் நகரில் மாநில அளவிலான மாநாடு நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சார்பில், ‘ஆள் கடத்தல் தடுப்பு’ சம்பந்தமாக மாநில அளவிலான மாநாடு நேற்று முன்தினம் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது. டிஜிபி சைலேந்திரபாபு இதை தொடங்கி வைத்து ஆள் கடத்தல் பற்றியும் அதை தடுப்பது குறித்தும் விரிவாக பேசினார்.

வணிக ரீதியிலான பாலியல்சுரண்டல்கள், கொத்தடிமைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கட்டாய திருமணம், வீட்டு அடிமைத்தனம், சட்டவிரோதமான தத்தெடுப்பு, பிச்சை எடுத்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தனி நபர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி டி.கல்பனாநாயக், காவல் கண்காணிப்பாளர்கள் வி.ஜெயம் , எம்.கிங்ஸ்லீன், துணை ஆணையர் ஜி.வனிதா மற்றும் சர்வதேச நீதி இயக்கத்தின் அதிகாரிகள், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், தொழிலாளர் துறை அதிகாரிகள், சட்டப் பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.