ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை..!

புதுடெல்லி: கடந்த 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

இதனுடன் இணைந்திருந்த லடாக்கை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது பாஜகவிற்கு சாதகமாகி உள்ளது. இதனால், நேற்று முதல் ஜம்மு-காஷ்மீரின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியூகம் அமைக்கத் தொடங்கி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கட்சியாக பிடிபி இருந்தபோது அதனுடன் கூட்டணி வைத்திருந்தது பாஜக. இதன் அமைச்சரவையிலும் பாஜக தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

எனவே, தற்போதைய ஆலோசனையில், காஷ்மீரின் சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிடுகிறது. இதற்காக கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளரையும் முன்னிறுத்த முடிவு செய்துள்ளது. இப்பட்டியலில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா சிங், ஜம்மு-காஷ்மீர் பாஜக மாநிலத் தலைவர் ரவீந்திரா ராணா இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் காலகட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவான பிறகு, சட்டப்பேரவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு பின் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தேர்தல் நடைபெற்றால், அதன் முடிவுகள் மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், காஷ்மீரில் பாஜகவின் வெற்றி உறுதி இல்லை என்பதால், 2024 மக்களவைக்கும் சேர்த்து ஜம்மு-காஷ்மீருக்கும் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பாஜக திட்டமிடலாம் என்று தெரிகிறது.

கடைசியாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் 2014-ல் நடைபெற்றது. அப்போது மொத்தம் இருந்த 87 தொகுதிகளில் மெகபூபா முப்தியின் பிடிபி 28, பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இதர பெரிய கட்சிகளில் என்சி 15, காங்கிரஸ் 12, சிறிய கட்சிகளில் ஜேகேபிசி 2, சிபிஐஎம் மற்றும் ஜேகேபிடிஎப் தலா 1 மீதம் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

பிறகு நடந்த 2019 மக்களவை தேர்தலில் 6 தொகுதிகளில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி (என்சி) காஷ்மீரின் 3, ஜம்மு பகுதியில் பாஜக மூன்றிலும் வெற்றி பெற்றன. பாஜக ஆதரவுடன் பிடிபி 2014-ல் ஆட்சி அமைத்ததால் அக்கட்சிக்கு மக்களவையில் படுதோல்வி ஏற்பட்டது.

தனி அந்தஸ்து நீக்கத்தினால், யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர்களான என்சியின் உமர் அப்துல்லா, பிடிபியின் மெகபூபாவும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர், ஆனால் தேர்தலில் இருவரது கட்சிகளும் போட்டியிடும்.