அம்பேத்கர் பிறந்த நாள்.. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை..!

டெல்லி: சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு , பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படும் சட்ட மேதை அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். சட்ட வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார். 1990-ல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அம்பேத்கரின் பிறந்த நாளின் போது ஒவ்வொரு வருடமும் புத்த பிட்சுகளுக்கு மரியாதை செய்யப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற்றது. அம்பேத்கர் தனது வாழ்நாளில் புத்த மதத்தை தழுவினார் என்பதை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. புத்த மத குருமார்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.