சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்: அசோக்குமார் (அதிமுக): இதுவாக்கு ஜாலம் கொண்ட பட்ஜெட். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றீர்கள். அது பட்ஜெட்டில் இல்லை. அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகளை பாதுகாத்து கண்காணிக்க 25 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதுவும் பட்ஜெட்டில் இல்லை. நீர்நிலைகள், வனப் பகுதியை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் பிளஸ் 2 முடித்த 75 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில். இல்லை. மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக முதல்கட்டமாக 2,500 காவலர்களை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
அமைச்சர் எ.வ.வேலு: 5 ஆண்டுகள் ஆள வேண்டும் என்பதற்காகமக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் அனைத்தும் பகிர்ந்து நிறைவேற்றப்படும்.
முதல்வர் ஸ்டாலின்: அதிமுகஉறுப்பினர் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள். ஏன் செய்யவில்லை என்கிறார். நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம் முழுமையாக செய்து முடித்துவிட்டீர்களா?
பல வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றவில்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த10 மாதங்களில், நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப்போல எந்த ஆட்சியிலும் செய்ததில்லை.
நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளை கேட்டிருக்கிறீர்களோ, அதையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். அதனால் நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக அவை நிறைவேற்றப்படும். அதுதான் எங்கள் லட்சியம். அதுதான் எங்கள் கொள்கை.
மக்கள் நலப் பணியாளர்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி நியமித்தார். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள். இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக ஆட்சியில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Leave a Reply