உச்ச கட்ட பரபரப்பில்… நாளை தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் !!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவில் நடந்து வரும் அதிகார மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அடிதடி, கலவரம், நிர்வாகிகள் நீக்கம் என முடிவு இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில், அதிமுக வின் எம்எல்ஏ கூட்டம் ஜூலை 17ஆம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வழக்கமாக அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தான் நடைபெறும். ஆனால் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் முதலில் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு அரசுடையது என்பதால் அரசியல் கட்சி சார்ந்த கூட்டங்களை அங்கு நடத்தினால் வழக்காகிவிடும்.

எனவே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தனியார் விடுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4மணிக்கு அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனினும் ஓ.பன்னீர்செல்வம் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவருகிறார். இதனால் பதற்றம் ஏற்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.