கேரளாவில் அஜித் – நன்றி கடிதம் எழுதியதன் பின்னணி என்ன?.. வைரலாகும் புகைப்படம்…

நடிகர் அஜித்குமார் கேரளாவில் உள்ள குருகிருபா பராம்பரிய வைத்திய மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். அவரது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் தனக்குக் கனிவான உபசரிப்பு வழங்கிய நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் கைப்பட நன்றி கடிதம் ஒன்றை எழுதி அதை வழங்கிவிட்டு வந்திருக்கிறார்.

அவருக்கு சிகிச்சை அளித்த உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரையும் அதில் குறிப்பிட்டு, “இருவருக்கும் Gurukripa குழுவினருக்கும், உங்களின் அன்பு, ஆதரவு, கனிவு மற்றும் உபசரணைக்கு நன்றி. அழகான வாழ்க்கை அமைய உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்” என அதில் எழுதியிருக்கிறார். அஜித் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கும் அந்தக் கடிதமும் அவர்களுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குருகிருபா என்பது ஆயுர்வேத சிகிச்சையை பாரம்பரியமான களரி குணப்படுத்தும் முறைகளோடு இணைத்து வழங்கும் ஓர் இடம். மிகவும் பழைமையான ஆயுர்வேத மையங்களில் இதுவும் ஒன்று. இந்த மையத்தில்தான் கேரள நடிகர் மோகன்லாலும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். மோகன்லால், குருகிருபா பற்றி எழுதிய கடிதமும் அவர்களது இணையத்தளத்தில் காணக்கிடைக்கிறது.

இதற்கு முன்னர் அஜித் கேரளாவின் கோயில் ஒன்றில் வழிப்படும் புகைப்படங்கள் சில வெளியாகின. அது இந்தச் சிகிச்சைக்குப் பிறகானது எனத் தெரிக்கிறார்கள்.

அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வலிமை’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்த அஜித்துக்குக் காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சையில் இருந்தார். சமீபத்தில் அதே ‘வலிமை’ பட இயக்குநர் எச்.வினோத் இயக்கத்திலேயே ‘அஜித் 61’க்கான படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.