விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறவுள்ளது.
பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அஜீத் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலேயே இன்று காலை 11 மணியளவில் அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசின் அதிகாரிகளும், தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாநில அரசு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, பாராமதி விமான நிலையத்தில் இந்திய விமானப் படை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
வித்யா பிரதிஸ்தான் திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அஜீத் பவாரின் உடல் நேற்றிரவு வரை வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, நேற்றிரவு பாராமதி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்ட அஜீத் பவாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.







