தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், பெண்கள் குறித்து சில அரசியல் தலைவர்கள் பேசிய கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவி சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசிய கருத்துகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.
திமுக அரசை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், நடிகை நயன்தாரா குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டதாக அதிமுக ஐ.டி. விங் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.இதேபோன்று, திண்டுக்கல் சீனிவாசனும் பெண்களை அவதூறாக பேசினார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை குறிவைத்து இவ்வாறான கருத்துக்கள் பேசப்படுவது அரசியல் பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் முக ஸ்டாலின் அவர்களும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் (Twitter) பதிவில், “தமிழ்நாட்டுக்கான மேடை எது என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “எங்கள் மேடைகளில் தமிழகத்தின் வளர்ச்சி, சாதனைகள் மற்றும் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து தரவுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மறுபுறம் சிலர் பேசுவதற்கு சாதனைகள் இல்லாததால், அவதூறு மற்றும் ஆபாசமான கருத்துகளையே முன்வைக்கின்றனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.





