அனுமதியின்றி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே.அப்பு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு. தானாக சென்று ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனை அடுத்து இவர் மீது வருவாய் துறையினர் புகார் அளித்ததன் பேரில் காட்பாடி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததாகவும் அதன் அடிப்படையில் தற்போது அவரை கைது செய்து காட்பாடி காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தூண்டுதலின் பேரில் போலீசார், அத்து மீறுவதாகவும் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர் வீட்டு முன்பாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காட்பாடி காவல் நிலையம் எதிரில் அதிமுகவினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரசமங்கலம் விஏஓ அளித்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல், அச்சுறுத்தல் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் செயலில் ஈடுபடுதல், அனுமதியின்றி கூட்டம் கூடுதல், சட்டவிரோதமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நான்கு பிரிவுகள் பிணையில் வரமுடியாத பிரிவுகளாக உள்ளது.
Leave a Reply