கேரளாவில் ஆப்ரிக்க வகை பன்றிக் காய்ச்சல்: அம்மாநில அரசு அதிர்ச்சி தகவல்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் சமீப காலங்களில் கொரோனா, டெங்கு , பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், தற்போது குரங்கு அம்மை என பொதுமக்களை மிரட்டி வருகிறது. கேரள அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து குரங்கு அம்மை நோயை பரவ விடாமல் தடுக்கும் முயற்சியில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சின்சுராணி தெரிவித்துள்ளார்.

பன்றிகளிடம் பரவும் இந்த வகை வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என விலங்குகள் நலத்துறை தெரிவித்திருக்கிறது. கேரளாவில் பன்றி இறைச்சி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எனவே பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உயிருடன் உள்ள பன்றிகள், அதன் இறைச்சிகள், பன்றி உணவு வகைகளை கேரளாவிற்குள் கொண்டு வரவும், இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் ஆகஸ்ட் 14 வரை தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளிலும் கண்காணிப்பை கடுமையாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.