அதிநவீன ஏவுகணை தாக்குதல் மூலம் ஒரே நாளில் 420 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு

கீவ்: உக்ரைனில் அதிநவீன ஏவுகணை தாக்குதல் மூலமாக ஒரே நாளில் 420 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் உக்கிரமான போர் 130 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காகவே வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள் நாட்டில் பிற பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு உக்ரைனில் இருக்கும் மைக்கோலைவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்யா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மைக்கோலைவ் நகரில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் ரஷ்ய படைகள் அதிநவீன ஏவுகணைகளை கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 350 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல மைக்கோலைவ் நகரில் இருக்கும் தாற்காலிக ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் ராணுவம் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று ரஷ்யா எச்செரிக்கை விடுத்துள்ளது.