வருமானத்திற்கு அதிகமாக 354% சொத்து சேர்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் மீது வழக்கு பதிவு..!

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் தொடர்புடைய வீடுகளில் ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து, அவர் வருமானத்திற்கு அதிகமாக 354.66 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வர முருகன்  பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்படி விசாரணை நடக்கிறது. இதன் ஒரு கட்டமாக ஈரோட்டில் அக்ரஹார வீதியில் உள்ள இவரது மாமனார் அறிவுடை நம்பி  வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர்.

ஈரோட்டில் அறிவுடை நம்பி நகைக்கடை நடத்தி வருகிறார். மதியம் 3 மணி வரை சோதனை நடந்தது.
வங்கி தனியார் நிதி நிறுவனங்களில் பணபரிவர்த்தனை புதிய இடம், சொத்துக்கள், வாகனங்கள் வாங்கியது குறித்து விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், கோபி அருகே வெள்ளாங்கோவிலில், ராமேஸ்வர முருகனின் பெற்றோர் சின்ன பழனிசாமி செட்டியார், 75, மங்கையர்கரசி, 70, வசிக்கின்றனர். இங்கும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், ராமேஸ்வர முருகனின் பெற்றோரிடம் விசாரித்தனர்.

மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நீண்ட நேரம் சோதனை நடத்தினர். வங்கி கணக்கில் இருப்பு, டிபாசிட் விபரங்கள் மற்றும் நிலங்கள் சார்ந்த ஆவணங்களை தணிக்கைக்கு எடுத்து சென்றதாக தெரிகிறது.

கடந்த 2012 – 16 காலகட்டத்தில் ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 354 சதவீதம் சொத்து சேர்த்ததாக ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி தந்தை, தாய் , மாமியார், மாமனார் ஆகியோர் மீதும் ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.