விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை – காரணம் என்ன..?

விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பிறந்தநாளன்று அவர்களது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, இப்தார் நிகழ்ச்சி நடத்துவது போன்றவற்றை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

அண்மையில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்..