சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளையாக ஏற்பு.. நன்கொடையில் இருந்து 175 கோடிக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு..!

புனே: சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளது சீரடி சாய்பாபா கோவில். மும்பையிலிருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சீரடி என்ற இடம் சாய் பாபாவின் வீடு என்று அறியப்படுகிறது.

சாய் பாபாவை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும் என்கிற நம்பிக்கை பலருக்கும் உண்டு. சாய்பாபா மட்டும் அற்புதங்களை செய்யவில்லை சீரடியில் உள்ள பலவும் அற்புதங்களால் நிறைந்துள்ளது. இதன் காரணமாகவே தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சீரடிக்கு வந்து செல்கின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, சீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள இரண்டாவது பணக்கார கோயில் இதுவாகும். சாய்பாபாவினால் பயனடைந்த ஏராளமானோர் நன்கொடைகளை கொட்டிக் கொடுக்கின்றனர்.

சாய் பாபா பூவுலகைவிட்டு மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீரடியில் உள்ள சாய் பாபா கோயில் 1922 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த ஆலயம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரராக இருந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்பவருக்கு சொந்தமானது.

சாய் பாபாவின் பெரிய பக்தராக இருந்த அந்த பணக்காரர், பாபா மறைந்த பின்னர் ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார். இருப்பினும், இப்போது இந்த கோயில் ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவருகிறது. சாய் பாபா கோவிலில் ஆசீர்வாதம் பெற தினமும் சுமார் 60,000 பேர் சீரடிக்கு வருகிறார்கள். ‘சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன்’ என்று சீரடி சாய் பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட இங்கு வருவதால் இந்த கோவிலின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

சாய் பாபாவின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை காண சீரடிக்கு வருவதன் காரணத்திற்காக, இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை சீரடிக்கு இயக்குகிறது. இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் சைனகர் சீரடி ரயில் நிலையத்தை எளிதாக அடைய முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ள பூரியிலிருந்து மேற்கில் சீரடிக்கு வெறும் 24 மணி நேரத்தில் பயணிக்க முடியும்.

இந்த நிலையில் சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் அறக்கட்டளை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் ஒரு அறக்கட்டளை என்று கருதிய வருமான வரித்துறை 2015-16ஆம் ஆண்டுக்கான வரி மதிப்பீடின் போது, நன்கொடையாக பெறப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரி விதித்தது. இதற்காக 183 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதை அடுத்து அறக்கட்டளை சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரி நிர்ணயம் செய்யப்படும் வரை செலுத்த வேண்டிய வரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடிக்கான வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.