டிரம்பின் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சொந்தமான ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட்டுக்குள், அமெரிக்க நேரப்படி ஞாயிறு அதிகாலை 1.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேன் உடன் நுழைய முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், துப்பாக்கி மற்றும் எரிப்பொருளை கீழே போடும்படி அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால், அந்த இளைஞர் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின்போது டிரம்ப் அந்த வீட்டில் இல்லை.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் வட கரோலினாவின் கேமரூனைச் சேர்ந்த ஆஸ்டின் டி மார்ட்டின் எனத் தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அவர் காணாமல் போனதாக, குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், அவர் டிரம்பின் ரிசார்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததன் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.







