மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானை-சுற்றுலா பயணிகள் புகைபடம் எடுத்து மகிழ்ந்தனர்..!!

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தோட்டங்களில் பலா மரங்கள், மூங்கில்கள் அதிகளவில் உள்ளது. தற்போது பலா சீசன் தொடங்கி உள்ளதால், மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக கடந்த சில வாரங்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதை மற்றும் கோத்திகிரி-மேட்டுப்பாளையம் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குன்னூர் பகுதியில், கடந்த ஒரு வார காலமாக காட்டு யானைகள் குட்டியுடன் இங்கு சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே உள்ளனர். இந்த நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் நேற்று காட்டு யானை ஒன்று குட்டியுடன் உலா வந்தது. அப்போது அந்த வழியாக மலைரெயில் வந்தது. இதையடுத்து யானைகள் தண்டவாளத்தை விட்டு சற்று தள்ளி அங்கிருந்த மரத்தில் பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தது. இதனை ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் தங்களது செல்போன்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்…