அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்… நிகிதா கொடுத்த புகாரில் சி.பி.ஐ. விசாரணை..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடந்த நகை திருட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவலில் இருந்த இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. தீவிரமாக விசாரித்து வருகிறது.

பேராசிரியை நிகிதா, தனது தாயார் சிவகாமியுடன் ஜூன் 27-ஆம் தேதி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது காவலர் சீருடையுடன் இருப்பது போல தோற்றமளித்த அஜித்குமார், காரை நிறுத்துவதை தானே பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி சாவியைப் பெற்றுக்கொண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், கோவிலிலிருந்து திரும்பிய நிகிதா, தனது கைப்பை கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கவனித்துள்ளார். அதில் இருந்த மொத்தம் 9½ பவுன் எடையுள்ள தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. அதாவது,6 பவுன் தங்க சங்கிலி,2¼ பவுன் தங்க வளையல்கள்,1¼ பவுன் எடையுள்ள கல் பதித்த மோதிரங்கள் (2)என நகைகள் திருட்டு போயுள்ளதாக நிகிதா புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அடுத்த நாள் இரவு, அவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.

பின்னர் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 44 வெளிப்புற காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதில் 19 காயங்கள் தசை வரை ஆழமாக நீண்டிருந்தன. மேலும் மரணம் நடந்த நேரம் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பே என்று அறிக்கை கூறியது. ஆனால், இறப்புக்கான துல்லியமான காரணம் குறிப்பிடப்படவில்லை.

இந்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால், மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், நிகிதா அளித்த நகை திருட்டு புகாரும் தனியாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட தகவல்படி,நிகிதா அளித்த புகாரும், வழக்கு ஆவணங்களும் திருப்புவனம் போலீசாரால் சி.பி.ஐ.க்கு ஒப்படைக்கப்பட்டன.சி.பி.ஐ. தற்போது நிகிதா புகாரின் அடிப்படையில் புதிய வழக்கை பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளது.எழுந்துள்ள கேள்விகள்

உண்மையிலேயே நிகிதாவின் நகைகள் திருடப்பட்டதா?அல்லது மேலிட அழுத்தத்தின் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கியார்களா?போலீசாரின் வன்முறைதான் உயிரிழப்புக்கு காரணமா?

என்பன தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.இந்த வழக்கின் உண்மைத்தன்மையை வெளிச்சமிட்டு காட்ட சி.பி.ஐ. விரிவான விசாரணை நடத்தி வருகிறது.