கோவில் மாசி திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விநோத திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டவன் திருக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கே பூவினால் அலங்கரிக்கப்பட்டு தொட்டிச்சியம்மன் கரகம் பாலித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்கள் பாரம்பரிய வழக்கப்படி, அருள்மிகு ஸ்ரீ பட்டவன் சுவாமி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்பொழுது உறுமி மேளம் முழங்க, கோவிந்தா கோஷத்துடன் மடியில் தேங்காய்களை கட்டிக் கொண்டு வந்த கோவில் பூசாரி, வரிசையாக ஆண்கள்,பெண்கள் என அமர வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பக்தரின் தலையில் தேங்காய் உடைத்தார். இந்த நிகழ்வின் போது சுற்றி இருந்து பார்க்கும் பக்தர்கள், உறுமி மேளம் அடிக்க அடிக்க ஒவ்வொருத்தராக சாமியாடினர்.
இதனை தொடர்ந்து பூசாரிகள் அருவா மீது ஏறி நின்று சாட்டயால் அடித்து அருள்வாக்கு கூறியபடி கரகத்துடன் நையாண்டி மேளம், கரகாட்டம், மேளம், வானவேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீ தொட்டிச்சியம்மன் கரகம் தொட்டிச்சியம்மன் திருக்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.
நள்ளிரவில் பாரம்பரியமாக நடக்கும், தலையில் தேங்காய் உடைக்கும் இந்த விநோத திருவிழா நிகழ்வை காண, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.








