கோவை வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). என்ஜினீயங் மாணவர். இவரும், இவரது நண்பர்களும் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சென்றனர். ஓணம் கொண்டாட்டம் முடிந்து நேற்று அதிகாலை ஆதர்ஸ், கல்லூரி நண்பர்களான வடவள்ளி. எஸ்.வி. நகரைச்சேர்ந்த ரோஷன் (18), ரவி கிருஷ்ணன் (18), நந்தனன் (18) காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை ரோஷன் ஓட்டினார். தொண்டாமுத்தூர் அருகே உள்ள தென்னமநல்லூர், கரியகாளியம்மன் கோவில் கோவில் அருகே உள்ள வளைவில் ரோஷன் காரை திருப்ப முயன்றார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரம் உள்ள தோட்டத்து இரும்பு கேட் கதவை உடைத்துக்கொண்டு அங்கிருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில் 70 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் கார் முழுவதும் மூழ்கியது. காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கதவை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார். ஆதர்ஷ், ரவிகிருஷ்ணன், நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ரோஷன் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கார் கிணற்றுக்குள் பாய்ந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்னமநல்லூர் ஊராட்சியில் 2 கிணறுகளும், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 3 கிணறுகளும், பூலுவப்பட்டியில் ஒரு கிணறும் சாலையோரத்தில் உள்ளது. இங்கு விபத்துகள் நிகழ்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திறந்த வெளி கிணறுகளை இரும்பு கம்பிகள் கொண்டு மூடவேண்டும். சாலையோர கிணறுகள் அருகே வேகத்தடுப்பு அமைக்க வேண்டும். திறந்த வெளி கிணறுகளை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலி சம்பத்தில் காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது வழக்கு..!









