மின் விளக்குகளால் ஜொலித்த கேரளா… 4 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய ஓணம் பண்டிகை..!!

திருவனந்தபுரம்: மகாபலி மன்னன் மக்களை சந்திக்க வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்றைய நாளில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு அத்தப் பூக்கோலமிட்டு மன்னனை வரவேற்பார்கள். கேரள மாதமான சிங்ஙம் மாதத்தில் அத்தம் நாளில் இருந்து திருவோணம் வரை 10 நாள் மலையாளிகள் தங்களது வீடுகளின் முன் பூக்கோலம் இடுவார்கள். இதற்கு அடுத்தபடியாக ஓணம் பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது ‘ஓண சத்யா’ என்று அழைக்கப்படும் ஓண விருந்தாகும். இந்த வருட ஓணம் பண்டிகை இன்று (8ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவனந்தபுரம் முதல் வட எல்லையான காசர்கோடு வரை அனைத்து பகுதிகளுமே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஓணம் பண்டிகை களையிழந்தது. 2020ல் கொரோனா நிலைகுலைய வைத்தது. அந்த ஆண்டும் மலையாளிகளால் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. 2021லும் கொரோனாவின் தாக்கம் நீடித்ததால் கடந்த ஆண்டும் ஓணம் பண்டிகை கனவாகி போனது.

இப்படி வரிசையாக 4 ஆண்டுகள் ஏமாற்றத்தை தந்த நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நீண்ட நாள் குறையை போக்குவதற்காக துபாய், குவைத், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் ஓணத்தை கொண்டாடுவதற்காக கேரளாவில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட பல்வேறு நகரங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 4வருடங்களுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் கலைஞர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மொத்தத்தில் கொரோனாவால் கடந்த 2 வருடங்களாக வீடுகளிலேயே அடைபட்டுக் கிடந்தவர்களுக்கு இந்த வருட ஓணம் பண்டிகை பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது .