அடடா! அப்படியா !! வெறும் 10 நாட்களில் ஒரு கோடி தேசிய கொடிகளை விற்ற தபால் நிலையங்கள்..!!

டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாகத் தபால் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இந்தாண்டு உடன் 75 ஆண்டுகள் ஆகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை இந்தியா கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டு, ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதற்காக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லி செங்கோட்டைத் தொடங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். மேலும், 75ஆவது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பைத் தொடர்ந்து தேசியக் கொடிகளைப் பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தியத் தபால் துறை சார்பிலும் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தியத் தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தபால் துறை அதன் 1.5 லட்சம் அலுவலகங்களின் நெட்வோர்க் மூலம் ஒவ்வொரு குடிமகனிடம் தேசியக் கொடிகளைக் கொண்டு சேர்கிறது. வெறும் 10 நாட்களுக்குள், ஆன்லைன் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இந்தியத் தபால் துறை 1 கோடிக்கும் அதிகமான தேசிய விற்பனையைச் செய்துள்ளது. இந்த கொடிகள் ₹ 25க்கு விற்பனை செய்யடுகிறது.

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நாடு முழுவதும் இலவசமாகத் தேசியக் கொடிகளை டெலிவரி செய்கிறோம். ஆன்லைன் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் பொதுமக்களுக்குத் தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு. இதற்கு எங்கள் 4.2 லட்சம் தபால் ஊழியர்கள் பெரிய உதவியைச் செய்கிறார்கள்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசியக் கொடியை வாங்க விரும்புவோர், தபால் நிலையங்கள் மூலம் எளிதாக மூவர்ணக் கொடியைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அருகே உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று 25 ரூபாயைக் கொடுத்து தேசியக் கொடியைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் மூவர்ணக் கொடியுடன் செல்பி எடுத்து என்றwww.harghartiranga.comதளத்திலும் பதிவிடலாம்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேசியக் கொடிகள் தபால் நிலையங்களில் கிடைக்கும்.