சென்னை: சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி, அவரது கூட்டாளிகள் மகேந்திர சிம்ஹன், சாந்தி, லாசர், கணேசன், சீனிவாசன், சக்திவேல், பாபு, பார்த்திபன், பெருமாள் (எ) பாலா ஆகியோர் மீது சிறப்பு புலனாய்வு பிரிவில் 9 வழக்குகள் பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 9 வழக்குகளில் விபசார தடுப்பு பிரிவு வழக்கில் கடந்த 11ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கில் குற்றப்பத்திரிகை நகல்கள் கடந்த 17ம் தேதி குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கான விபசார தடுப்பு பிரிவில் குற்றவாளிகள் மீது கடந்த 23ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவான பிரகாஷை கைது செய்ய, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.









