கோயில்கள் மற்றும் மதச்சடங்குகளின் போது விலங்குகளைப் பலியிடுவதைத் தடுக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் ஸ்ருதி பிஷ்ட் என்பவர், கோயில்கள் அல்லது மதச்சடங்குகளின் போது விலங்குகள் பலியிடப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘விலங்குகள் வதைத்தடுப்பு சட்டம் 1960 -ன் பிரிவு 28 -ஐ திருத்த வேண்டும். இந்த பிரிவில் எந்தவொரு மதத்தினரும் வழிபாட்டு முறையின் ஒருபகுதியாக விலங்குகளைப் பலியிடலாம் என்ற விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பிரிவை நீக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ‘மதவழிபாடு மற்றும் பண்டிகைகளின் போது விலங்குகள் பலியிடப்படுவதைத் தடுக்கவும், இந்த நடைமுறைகளுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், ஒன்றிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக விளக்கம் கோரியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (18-11-26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.








