நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அழகை ரசிப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு அருகில் உள்ள பெரிச்சே என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில், நேற்று முன்தினம் காலை 8.15 மணியளவில் தரையிறங்குவதற்காக அடுத்தடுத்து வந்த இரு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதிக்கொண்டன.பிஷ்டெயில் ஏர்’ மற்றும் ‘ஏர் டைனஸ்டி’ ஆகிய நிறுவனங்களால் இயக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள், ஒரே இடத்தில் தரையிறங்க முயன்றபோது கோர விபத்து நடந்தது. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன. பயங்கர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இந்தியர் வசந்தகுமார் பலராமராமுடு(47)பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த வசந்தகுமார் சென்னையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்தசம்பவம் குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து அதிகாரி கூறுகையில், ‘லுக்லா பகுதியில் இருந்து வந்த ஒரு ஹெலிகாப்டரும், கோரக்பூர் பகுதியில் இருந்து திரும்பிய மற்றொரு ஹெலிகாப்டரும் வெவ்வேறு திசைகளில் இருந்து ஒரே இடத்தில் தரையிறங்க முயன்றபோது மோதிக்கொண்டன. பனி மூடியிருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம்’ என்றார். விபத்தில் வெளிநாடு வாழ் இந்தியரான சைலேஷ் கிருஷ்ணா படேல்(49) மற்றும் 2 ஹெலிகாப்டர்களின் பைலட்டுகளான ரபீந்திர பிரஜாபதி, கே.சி.பிரஜ்வால் ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் காத்மாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை விரைவில் தாயகம் கொண்டு வருவதற்காக, இந்திய அதிகாரிகள் நேபாள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.








