ஆம்னி பஸ் கட்டண உயர்வு இல்லை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க முடிவு செய்துள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கும் பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் பாண்டியன், பொதுமக்களுக்கு கட்டணச் சுமை இல்லாத தீபாவளியாக அமைய அனைத்துப் பேருந்து உரிமையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதம் செலுத்தினாலும் பேருந்துகள் உடனடியாக விடுவிக்கப்படாது. பொங்கல் பண்டிகை வரை விடுவிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டவை. இதுவே உண்மையான கட்டணப் பட்டியல். மற்ற நாள்களில் பயணிகளின் வசதிக்காகக் குறைந்த கட்டணத்திலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆம்னி பேருந்துகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்த விவகாரத்தில், ஒவ்வொரு பயணியின் உடைமைகளையும் முழுமையாகச் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. இருப்பினும், போதைப் பொருள் கடத்தலுக்கு ஓட்டுநர் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுவார். பேருந்துகளில் பட்டாசுகளைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது. பயணிகளின் உடைமைகளில் பட்டாசுகள் இருந்தால் அவை இறக்கி வைக்கப்படும். ஆம்னி பேருந்துகள் மணிக்கு 90 கி.மீ. வேகத்திற்கு மேல் இயக்கப்படுவதில்லை. பேருந்துகள் மெதுவாகச் சென்று திடீரென வேகமெடுக்கும்போது அதிக வேகத்தில் செல்வதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இவ்வாறு ஜெயம் பாண்டியன் கூறினார்.

அறிவிக்கப்பட்ட கட்டணப் பட்டியலின்படி, சென்னை- மதுரை வழித்தடத்தில் ரூ.1,690 முதல் ரூ.2,560 வரையிலும், சென்னை-திருநெல்வேலி வழித்தடத்தில் ரூ.1,960 முதல் ரூ.3,270 வரையிலும், சென்னை- நாகர்கோவில் வழித்தடத்தில் ரூ.2,220 முதல் ரூ.3,710 வரையிலும் கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னை- கோவை வழித்தடத்தில் ஏ.சி வசதியில்லாத இருக்கைக்கு ரூ.1,730, படுக்கை வசதிக்கு ரூ.2,090, ஏ.சி இருக்கைக்கு ரூ.1,990, ஏ.சி படுக்கை வசதிக்கு ரூ.2,460 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வால்வோ இருக்கைக்கு ரூ.2,200, படுக்கை வசதிக்கு ரூ.2,880 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை- திருநெல்வேலி, கோவை- திருச்செந்தூர், கோவை- ராமேஸ்வரம் வழித்தடங்களில் ஏ.சி வசதியில்லாத இருக்கைக்கு ரூ.1,410, படுக்கை வசதிக்கு ரூ.1,680, ஏ.சி இருக்கைக்கு ரூ.1,600, ஏ.சி படுக்கை வசதிக்கு ரூ.1,940 எனக் கட்டணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வால்வோ இருக்கைக்கு ரூ.1,750, படுக்கை வசதிக்கு ரூ.2,130 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோவை- மதுரை வழித்தடத்தில் ரூ.1,030 முதல் ரூ.1,460 வரையிலும், கோவை- பெங்களூரு வழித்தடத்தில் ரூ.1,100 முதல் ரூ.1,710 வரையிலும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்தின் வகை மற்றும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.