இருசக்கர வாகனதிற்குள் புகுந்த நாகப்பாம்பு குட்டி” – கோவையில் நின்று இருந்த இருசக்கர வாகனத்தில் சரேலென நுழைந்த பாம்பு: நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்பு!
கோவை, சிவானந்தா காலனி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்திற்குள் நாகப்பாம்பு குட்டி ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையேயும் வாகன ஓட்டிகள் இடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாநகர், சிவானந்தா காலனி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் வழக்கம் போல் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது.அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் எஞ்சின் மற்றும் பாடி பேனல்களுக்கு இடைப்பட்ட குறுகிய இடைவெளியில், சுமார் 2 அடி நீளமுள்ள நாகப்பாம்பு குட்டி ஒன்று திடீரெனச் சரேலென உள்ளே புகுந்து உள்ளது. இதனை எதிர்பாராத விதமாகப் பார்த்த வாகன உரிமையாளர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வாகனத்திற்குள் பாம்பு புகுந்த தகவல் பரவியதும், அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அப்பகுதிவாசிகளின் உதவியுடன் வாகனத்தின் பாகங்களைக் கவனமாக அகற்றி, பாம்பைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, இருசக்கர வாகனத்திற்குள் மறைந்து இருந்த நாகப்பாம்பு குட்டி எவ்விதக் காயமுமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட நாகப்பாம்பு குட்டியைப் பாதுகாப்பான பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்த பகுதிவாசிகள், அதனை அருகில் உள்ள சங்கனூர் ஓடை நீர்நிலைப் பகுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.









