தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13ம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 25 பேரில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். இதையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிட்டு அதனை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் பதவியை ராஜினாமா செய்த நான்கு எம்.எல்.ஏக்கள் மீது சட்டரீதியான விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்போது தெரிவித்திருந்தார். மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்து கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதில்,\\”அதிமுக கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை கட்சியின் தலைவர் மன்னித்துவிட்டதால், அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. சட்டப்படி 15 நாட்களில் மன்னித்து, தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது, அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் எந்தவித தவறும் கிடையாது. எனவே, தற்போதைய நிலையில் எந்த கட்சித்தாவல் நடவடிக்கையும் தேவையில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தனர். மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,\\” தமிம்நாடு சட்டப்பேரவை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து மொத்த எண்ணிக்கையில் 21பேர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவை திரும்பப்பெற்று கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து அதனை ஏற்றுக்கொள்வதாகவும், நடவடிக்கையை கைவிடுவதாகவும் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிடுகிறார். இதில் முதலாவதாக 21 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்படுகிறது.
அதுகுறித்து எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் எப்படி நடவடிக்கையை சபாநாயகர் கைவிட முடியும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். எனவே மேற்கண்ட விவரங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின் 2(1)பியின் கீழ் செல்லுபடியான மன்னிப்பு மற்றும் திரும்பெப்பெறுதலை உள்ளடக்குகின்றனவா?, சட்டத்திற்கு இணங்க அந்த நடவடிக்கையை தீர்மாணிக்கிறதா?, மேலும் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க சபாநாயகருக்கான அதிகாரம் அனுமதி வழங்கி உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி மற்றும் வி மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட தலைமை நீதிபதி இந்த விவகாரம் என்பது ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. எனவே தற்போது நாங்கள் இதில் தலையிட்டு என்ன விதமான உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பான வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டார்.







