ராஜேந்திர அர்லேகர்: தமிழகத்தின் புதிய முழுநேர ஆளுநர்!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தமிழ்நாட்டிற்கும், சிக்கிம் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய ஆளுநர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் நாளிலிருந்து இந்த உத்தரவுகள் அமலுக்கு வரும் என குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கேரள ஆளுநரான ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்றபோது, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும் அர்லேகர்தான்.

கோவா சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான இவர், இதற்கு முன்பு இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பைக் கவனித்து வந்த அர்லேகர், தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்கிம் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளாவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான மாத்தூர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். கடந்த 2024 ஜூலை மாதம் சிக்கிம் ஆளுநராகப் பொறுப்பேற்ற அவர், தற்போது கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரஜ் மோகன் ராம் நியமிக்கப்பட்டுள்ளார். பலாமு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள ஹரி பாபு கம்பம்பதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் ஆளுநராக சுதா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக மக்களவை உறுப்பினரான இவர், பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது கர்நாடக ஆளுநராக உள்ள தாவர்சந்த் கெலாட்டுக்குப் பதிலாக இவர் பொறுப்பேற்கிறார். இதன் மூலம், கர்நாடகாவின் இரண்டாவது பெண் ஆளுநர் என்ற சிறப்பை சுதா யாதவ் பெறுகிறார். இதற்கு முன்பு வி.எஸ். ராமாதேவி, 1999 முதல் 2002 வரை கர்நாடக ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் தால் சிங் பிசென் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங்குக்குப் பதிலாகப் பொறுப்பேற்கிறார்.

சிக்கிம் மாநிலத்தின் ஆளுநராக பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓம் பிரகாஷ் மாத்தூருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார்.