பகலிலும் பாதுகாப்பில்லை! 🚨 கோவையில் தொடரும் திருட்டுகள்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

கோவையில் தொடரும் தொடர் திருட்டுகள்” – வீட்டின் பூட்டு உடைப்பு, மளிகை கடையில் கொள்ளை: பகல் நேரத்திலும் அரங்கேறும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி!

சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டு உஷார்படுத்தும் மக்கள்: காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தக் கோரிக்கை!

கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், இரவ நேரம் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் குற்றச் செயல்கள் அரங்கேறி வருவது அப்பகுதி பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது.

கோவை, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் திருட்டுக் சம்பவங்கள் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் கவலை தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் பதிவான முக்கியச் சம்பவங்களில் இருகூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த பொருட்களைத் திருடிச் சென்று உள்ளனர்.

உழவர் சந்தைப் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

SIHS காலனி பகுதியில் அமைந்துள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.
​
வழக்கமாக இரவில் நடக்கும் திருட்டுச் சம்பவங்கள் தற்போது பகல் நேரங்களிலும் அரங்கேறி வருவது காவல்துறைக்குப் பெரும் சவாலாக மாறி உள்ளது.

இதற்கிடையில், கோவை திருச்சி சாலையில் உள்ள TVH அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பகுதியில், கட்டுமானப் பொருட்களை ஆறு பேர் கொண்ட வாலிபர்கள் கும்பல் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.இந்தத் துணிச்சலான திருட்டுச் செயல்கள் பொதுமக்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளன.
​
தொடர் திருட்டுக் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளைக் கைது செய்யக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், குற்றவாளிகள் இன்னும் சிக்காதது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, காவல்துறை ரோந்துப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை விரைவில் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்பதே அப்பகுதிவாசிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.