டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று  கூடுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்கு பின் இக்கூட்டம் நடைபெறுவதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இம்முறை ஜிஎஸ்டி வரி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும், அதற்குப் பதிலாக ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் கீழ் வணிக நடைமுறைகளை எளிதாக்குதல், வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல் போன்ற ஐந்து முக்கிய தூண்களைக் கொண்ட சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, வணிகர்களுக்கான தொழில் செய்யும் வசதியை மேம்படுத்த இன்புட் டேக்ஸ் கிரெடிட் விதிகளில் தளர்வுகள், ஊழியர்களுக்கான காப்பீடு மற்றும் நிறுவன வாகனங்களின் மீதான வரிச் சலுகைகள், மற்றும் விரைவான பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட உள்ளன.

மேலும், சிறு வணிகர்கள் மற்றும் இ-காமர்ஸ் சப்ளையர்களுக்கு உதவும் வகையில் வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்யும் முறையை எளிதாக்குதல், போலி இன்வாய்ஸ்களைத் தடுத்து நேர்மையான முறையில் வரி செலுத்துவோரைப் பாதுகாத்தல் ஆகியவையும் இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சட்ட ரீதியான சீர்திருத்தங்களைப் பொறுத்தமட்டில், ரூ.1 கோடியாக உள்ள குற்றவியல் நடவடிக்கைக்கான வரம்பை ரூ.5 கோடியாக உயர்த்துவது மற்றும் கடுமையான மோசடி வழக்குகளைத் தவிர்த்து இதர சிறு குறைபாடுகளுக்கு நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்வதைக் கட்டுப்படுத்துவது போன்ற பல முக்கியத் திட்டங்கள் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.