ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி

ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விசாக்களை மாற்றிக்கொண்டே இருக்கும் “விசா ஹாப்பிங்

ஆஸ்திரேலியாவில் பேச்சுலர் அல்லது மாஸ்டர்ஸ்  டிகிரி முடித்த மாணவர்கள், நாட்டில் தொடர்ந்து தங்குவதற்காக அதைவிடக் குறைவான தகுதி கொண்ட தொழிற்கல்விப் படிப்புகளுக்கு மாற முடியாது. அப்படி மாற முயன்றால், அது நாட்டில் தங்குவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது என கருதப்பட்டு விசா நிராகரிக்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் படிக்கும் படிப்பை வேறு படிப்புக்கு மாற்ற விரும்பினால், இனி அதற்குத் தனியாகப் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சர்வதேசக் கல்வித் துறை இணையமைச்சர் ஜூலியன் ஹில் கூறுகையில், 2027 ஜூலை 1 முதல், ஒருவர் வேறொரு படிப்புக்கு மாறினாலும் அவரது விசா காலம் நீட்டிக்கப்படாது என்றார். ஆரம்பத்தில் 6 மாதங்கள் வகுப்பிற்கு செல்லாமல் பெயிலாகிவிட்டு, பின்னர் குறைந்த கட்டணம் கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு மாறுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் இது குறித்து கூறுகையில், “நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான தகுதி இல்லாத பலர், நாட்டில் தொடர்ந்து தங்குவதற்காக ஒரு விசாவிலிருந்து மற்றொரு விசாவிற்கு மாறிக் கொண்டே இருப்பார்கள். விசா காலாவதியாகும் போது நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து வழக்கை இழுத்தடிப்பார்கள்.

பல ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே குழந்தைகள் பிறந்து, உள்ளூர் சமூகத்தோடு ஒன்றிணைந்த பிறகு, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது கடினம் என்பதால் இந்த முறைகேட்டைப் பயன்படுத்துகிறார்கள். இதற்குத்தான் ‘விசா ஹாப்பிங்’ என்று பெயர்’ என்றார்.

ஆஸ்திரேலியர்கள் வேறு எந்த நாட்டிற்கும் சென்று ஆண்டுகணக்கில் விசாவை மாற்றிக் கொண்டு, அந்நாட்டின் சட்ட அமைப்பை ஏமாற்ற உரிமை இருப்பதாக நினைப்பதில்லை; அதேபோலத் தான் எங்கள் நாட்டிற்கு வருபவர்களும் நடக்க வேண்டும் என அமைச்சர் ஜூலியன் ஹில் தெரிவித்துள்ளார். போலியான வாக்குறுதிகளை அளித்து விசா நீட்டிப்பு வழக்குகளை நடத்தும் ஏஜென்ட்டுகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.