கைது செய்யத் கூடாதுனு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம்

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையில், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக பல பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) ஜூன் 27ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெ அன்று பதிவு செய்தது. அந்த வழக்கில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி, அன்பில் மகேஷின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர், மகேசுக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், செப்டம்பர் 18ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக 4 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய விலக்கு கோரி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, விசாரணைக்குப் பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். “தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு அன்பின் மகேஷ் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்தார். அதற்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அரசகுமார் தனியாக அலுவலகமே அமைத்து பணம் வசூல் செய்திருக்கிறார். பள்ளிக் கல்வித் துறைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் அமைச்சராக இருந்தார். எனவே, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் இடைக்கால நிவரணம் வழங்கக் கூடாது” என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, “மனு மீது இடைக்கால நிவாரணம் எதையும் வழங்க முடியாது. கைது செய்யக்கூடாது என உத்திரவிட்டால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் எப்படி இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பும். எனவே இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது. வேண்டுமென்றால் முன்ஜாமீன் தாக்கல் செய்யுங்கள்” என கூறினார். மேலும் அன்பின் மகேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க சென்னை காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.