போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் புகழ்ந்து பேசியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனிடம், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியை நீங்கள் மேடையில் புகழ்ந்து பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், தான் மேடை நாகரிகம் கருதியே அன்றைய தினம் வீரமணியைப் புகழ்ந்து பேசியதாகத் தெளிவுபடுத்தினார்.
மேலும் தொடர்ந்த அவர், எடப்பாடி பழனிசாமிக்கும் ஜெம் வீரமணிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரித்துப் பார்த்தால், அவர்களுடைய நட்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பது அனைவருக்கும் தெரியவரும் என்றும் கூறி அதிர வைத்துள்ளார். போக்சோ கைதி விவகாரத்தில் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







