20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் அய்சி – நகோயா நகரில் இன்று சனிக்கிழமை (செப். 19) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. 22 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 45 நாடுகளில் இருந்து 10,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். மொத்தமாக 43 விளையாட்டுகளில், 71 பிரிவுகளில் அவா்கள் களம் காணவுள்ளனா். அய்சி – நகோயா நகரில் வரும் அக்டோபா் 4-ஆம் தேதி வரை இந்த விளையாட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது.
ஒரு சில விளையாட்டுகளின் முதல்கட்ட ஆட்டங்கள் ஏற்கெனவே நடைபெற்று வந்தாலும், போட்டியின் அதிகாரபூா்வ தொடக்க நிகழ்ச்சி, நகோயா நகரில் உள்ள பலோமா மிஸுஹோ மைதானத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது. அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதுடன், போட்டியில் பங்கேற்கும் நாடுளின் வீரா், வீராங்கனைகளும் அணிவகுக்கவுள்ளனா்.
ஃப்ரீஸ்டைல் பிஎம்எக்ஸ், கலப்பு தற்காப்பு கலைகள், சா்ஃபிங், டெக்பால், விா்ச்சுவல் டேக்வாண்டோ ஆகியவை இந்த ஆசிய போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
போட்டி தொடங்கும் முன்பாகவே, தங்குமிட வசதி தொடா்பாக பல்வேறு பிரச்னைகளை, பங்கேற்பு நாடுகளின் அணியினா் தெரிவித்து வருகின்றனா். இந்திய வீரா், வீராங்கனைகள் சிலரும் தனியே ஹோட்டல்களில் தங்கும் நிலைக்கு ஆளாகினா். அத்துடன் நகரத்துக்குள்ளான போக்குவரத்திலும் பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து மொத்தமாக 501 வீரா், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் களம் காண்கின்றனா். அவா்களில் பலருக்கு, பதக்க வாய்ப்பு உள்ளோருக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் மத்திய அரசும் போதிய பயிற்சி மற்றும் உபகரண வசதிகளை செய்துள்ளது.
போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய விளையாட்டு வீரர்கள் தங்குமிடம் தொடர்பான சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நிலைமையை கையாள 3 அடுக்கு மேலாண்மை அமைப்பை உருவாக்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நகோயா விமான நிலையத்திற்கு வருகை தரும் வீரர்களுக்கு உதவ முதற்கட்டமாக இரண்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்திலீட் வரவேற்பு மையத்தில் (Athlete Welcome Centre) தங்குமிடப் பிரச்சினைகளை உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தீர்க்க மூன்று அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், நகோயாவில் வசிக்கும் சுமார் 2,000 இந்தியர்கள் கண்டறியப்பட்டு, தேவைப்பட்டால் இந்திய விளையாட்டு வீரர்களைத் தங்கள் வீடுகளில் தங்கவைக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்பாடுகளில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் சுமார் 30 முதல் 35 இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் தங்குமிடம் இன்றி சிரமங்களைச் சந்தித்ததாக இந்தியக் குழுவின் தலைவர் சகதேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அக்ரிடிடேஷன் நடைமுறைகள் சொகுசுக் கப்பலில் நடப்பதால் கூடுதல் நேரமாகிறது. போக்குவரத்து சிக்கல்களும் உள்ளன. இருப்பினும், வீரர்களுக்காக தனியாக 18 ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துள்ளோம்; மேலும் 10 அறைகள் பதிவு செய்யப்பட உள்ளன. வீரர்கள் யாருடைய பயிற்சியும் பாதிப்படையக் கூடாது என்பதில் அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது,” எனக் குறிப்பிட்டார்.








