தமிழக சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு பதிலுரை அளித்து பேசினார். அப்போது பேசிய அவர், “இதுவரை காணாமல் போனவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காணாமல் போன மலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெரம்பலூர் மாவட்டத்தில் எலும்பலூர் கிராமத்தில் 75 மீட்டர் உயரமுள்ள பிரம்பரசி மலை 2006 முதல் 25 மீட்டர் உயரம் வரை மூன்று ஏக்கர் பரப்பளவில் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரணைரை கிராமத்தில் 90 மீட்டர் உயரமுள்ள கோனாரிபோலை மலை 2004 ஆண்டு முதல் சுமார் 8 ஏக்கர் பரப்பில் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம் கிராமத்தில் 25 மீட்டர் உயரமுள்ள செங்குணம் மலை 2026 ஆண்டில் சுமார் 7 ஏக்கர் பரப்பில் 20 மீட்டர் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.
மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பில் 50 மீட்டர் உயரத்தில் ஒரு சக்கரைப்பிர மலை இருந்தது. ஆனால் 2003க்கு பிறகு அந்த மலையிலே 7.5 ஏக்கர் காணாமல் போய்விட்டது.
மதுரை மாவட்டத்தில் குண்டைம்பட்டி கிராமத்தில் 35 மீட்டர் உயரமுள்ள குன்று 2021-க்கு பிறகு சுமார் 5 ஏக்கர் பரப்பில் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் பேட்டை கிராமம் கிராமத்தில் 10 மீட்டர் உயரமுள்ள குன்று 2024 ஆண்டு முதல் சுமார் 2 ஏக்கர் பரப்பு வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலை கிராமத்தில் 16.16 ஹெக்டேர் பரப்பளவு, 70 மீட்டர் உயரம் கொண்ட அனந்தலை மலை 1998-க்கு பிறகு காணாமல் போனது.
கோயம்புத்தூர் மாவட்டம் முத்தூர் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு, 6 மீட்டர் உயரம் கொண்ட குன்று 2022-க்கு பிறகு காணாமல் போனது.
கோயம்புத்தூர் மாவட்டம், முத்தூர் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவு, 10 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு குன்று 2022-க்கு காணாமல் போனது.
தென்காசி மாவட்டம், அரியநாயகபுரம் கிராமத்தில் 7.5 ஏக்கர் பரப்பளவு, 50 மீட்டர் உயரம் கொண்ட கோணமலை இருந்தது 1999-க்கு காணாமல் போனது.
இப்போது நான் கூறியது அனைக்கும் ஒரு சாம்பிள் தான். இது போன்ற பல குன்றுகள் தமிழகத்தில் காணாமல் போய்விட்டது. காணாமல் போன மலைகள் எல்லாமே சுமார் 320 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. தமிழ்நாடு முழுவதும் உங்களுக்கு காட்டியது சாம்பிள் தான். 320 கோடி ஆண்டு என்றால் மனிதர்கள் வருவதற்கு முன்பே இந்த பூமியில் தோன்றியவை இந்த குன்றுகளும், மலைகளும்.
ஒரு மலை ஒரு வருடத்தில் இருந்து மூணு வருடத்திற்குள் முழுவதுமாக வெட்டி எடுக்கப்பட்டு மண்ணாகப்பட்டது. இப்பொழுது மலையை மட்டுமல்லாது, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதால், காலம் காலமாக நம் மண்ணுகளைக் காப்பாற்றி வந்த நீராதாரங்களாக விளங்குகின்ற கண்மாய், ஏரி, குளம் போன்றவற்றையும் பாழ்படுத்தி வைத்துள்ளனர்.
நீர்நிலைகளில் இருந்து மண்ணை அளவுக்கு அதிகமாக அள்ளி, அவற்றை ஆழப்படுத்தியதால் நீர் தேங்க வேண்டிய இடங்கள் பாறைகளாக மாறியுள்ளன. நீர்நிலைகள் பாதிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதிக ஆழத்திற்கு சென்றதால் பல இடங்களில் விவசாயிகள் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை அளித்த மிகப்பெரிய சொத்தான நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால், வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.
செயற்கை மணல் தயாரிப்பைக் குறைத்து, வாய்ப்புள்ள இடங்களில் இயற்கையான முறையில் மாற்று மணல் தயாரித்து, அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கண்மாய் மற்றும் ஏரிகளில் தேங்கியுள்ள மண்ணை, விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு நிறுவனங்கள் மூலம் முறையாக வெட்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுமானத் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து கனிமங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். குவாரிகளில் பயன்படுத்தாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுக் கற்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தமிழகத்தின் மணல் தேவைக்கு செயற்கை மணலை மட்டுமே நம்புவது நீண்டகாலத் தீர்வாகாது.
ஆற்று மணல், எம்-சாண்ட், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் என பல்வேறு வழிகளை ஒருங்கிணைத்து என்ற பல்முனை மணல் விநியோக முறையை உருவாக்குவது அவசியம். குறிப்பாக மலேசியா, கம்போடியா ஆற்றுப் பகுதி மற்றும் தைவான் ஆகிய இடங்களில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்கும்.
அனுமதியின்றி கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 2,210 வாகனங்கள் பிடிக்கப்பட்டு, 1,954 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 34.9 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல், 2026 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 298 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்டு, 105 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 46.7 சதவீதம் அதிகமாகும்.
மேலும், ட்ரோன் மூலம் 1,506 குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 499 குவாரிகளில் 303 குவாரிகளுக்கு மொத்தம் ரூ.500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.46 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. குவாரி ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 108 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ரூ.150 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.






