இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்கள் விளாசினர்.
அதேவேளையில் இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சோனல் தினுஷா 100, நிரோஷன் திக்வெல்லா 80 ரன்கள் சேர்த்தனர். 178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 66, தேவ்தத் படிக்கல் 44, கே.எல்.ராகுல் 35 ரன்கள் சேர்த்தனர்.
372 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ 6, பசிந்து சூரியபண்டாரா 0, கமிந்து மெண்டிஸ் 2, லகிரு உதரா 16 ரன்களில் நடையை கட்டினர். கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 31, சோனல் தினுஷா 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. தனது 20-வது அரை சதத்தை கடந்த தனஞ்ஜெயா டி சில்வா 151 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளையாடினார். அப்போது பந்து மட்டை விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்ற மானவ் சுதாரிடம் கேட்ச் ஆனது.
5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 202 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய நிரோஷன் திக்வெல்லா 17 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சீராக ரன்கள் சேர்த்த சோனல் தினுஷா தனது 2-வது அரை சதத்தை கடந்த நிலையில் 128 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் வீசிய 75-வது ஓவரின் முதல் பந்தில் லெக் சிலிப் திசையில் நின்ற துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதே ஓவரில் பிரபாத் ஜெயசூரியா (0), லகிரு குமரா (0) ஆகியோரையும் பெவிலியனுக்கு திருப்பினார் மானவ் சுதார். தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் கேஷரா நுவந்தாவை (20) போல்டாக்கினார் மானவ் சுதார். முடிவில் இலங்கை அணி 77.4 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் மானவ் சுதார் 23.4 ஓவர்களை வீசி, 2 மெய்டன்களுடன், 55 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்களையும் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் தேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 44 ரன்களும் சேர்த்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி கொழும்பு நகரில் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு எதிராக இலங்கை கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதில் 9 தோல்விகளும் அடங்கும்.
இலங்கை அணிக்கு எதி ரான காலே டெஸ்ட் போட்டியின் வெற்றியால் இந்திய அணி முழுமையாக 12 புள்ளிகளை பெற்றது. நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 53.33 சதவீத புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் தொடர்கிறது.
போட்டி முடிவடைந்த அடுத்த 5 நிமிடங்களில் கன மழை பெய்தது. இதனால் இந்திய அணி பெருமூச்சுவிட்டது. ஒருவேளை மழை முன்னதாக பெய்திருந்தால் அது போட்டியை வெகுவாக பாதித்து இருக்கக்கூடும்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சொந்த நாட்டில் நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தோல்விகளை சந்தித்திருந்த இந்திய அணிக்கு, பாரம்பரியமாக சுழற்பந்து வீச்சுக்கு பெயர் பெற்ற காலே மைதானத்தில் தற்போது கிடைத்துள்ள வெற்றி மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கக்கூடும்.
இலங்கை அணிக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் என கூட்டாக 10 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் வெளிநாட்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் 10 விக்கெட்களை வீழ்த்திய 7-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மானவ் சுதார் பெற்றார்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின், பிஷன் சிங் பேடி, எரப்பள்ளி பிரசன்னா, பகவத் சந்திரசேகர், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் நிகழ்த்தி உள்ளனர். இதில் அஸ்வின் இரு முறை 10 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
காலே மைதானத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்றுள்ள 28 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டி மட்டுமே (2025-ம் ஆண்டு இலங்கை – வங்கதேசம்) மழை காரணமாக பாதிக்கப்பட்டு டிராவில் முடிவடைந்தது. மற்றபடி 27 போட்டிகளிலும் முடிவு கிடைத்திருந்தது.
இலங்கை அணிக்கு எதிராக காலேவில் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு 600-வது போட்டியாக அமைந்திருந்தது. இந்த பயணத்தில் இந்திய அணி 187 வெற்றி, 188 தோல்வி, 224 டிரா மற்றும் ஒரு ‘டை’ (1986-ம் ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி) ஆகியவற்றை பதிவு செய்துள்ளது.
தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா கூறும்போது, “கடைசி இன்னிங்ஸில் வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள். இது அவ்வளவு எளிதானது அல்ல. காலே ஆடுகளம் முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. ஆனால், நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.
கே.எல். ராகுலும், தேவ்தத் படிக்கல்லும் அமைத்த தொடக்கத்தை பெரிய ரன்களாக மாற்றி, அங்கிருந்தே எங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். ஆட்டத்தின் முடிவில் டாஸ் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். ஏனெனில், இந்திய அணி டாஸ் வென்று பெரிய ஸ்கோரைக் குவித்தது. நாங்கள் பேட்டிங் செய்த போது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், அங்கிருந்து பின்னடைவைச் சந்தித்தோம்” என்றார்.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “மானவ் சுதார் சிறப்பாக பந்துவீசி வருகிறார். மிகவும் திறமையான, நம்பிக்கையளிக்கும் வீரராகவும், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடக்கூடிய வீரராகவும் தெரிகிறார். தேவ்தத் படிக்கலின் பேட்டிங்கைப் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. சதங்களை அடிப்பது முக்கியம் தான், ஆனால் சதம் அடித்த பிறகும் அவர், ஒரு பெரிய ஸ்கோரைக் குவித்தார்.
போட்டி குணம் நிறைந்த ஆட்டத்தில், அணி வசதியான நிலையில் இருக்கும்போது தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்த விதமும், நெருக்கடியான இரண்டாவது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தியதும் பார்ப்பதற்குச் சிறப்பாக இருந்தது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே எங்களின் இலக்காகும். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது எளிதானதல்ல, எனவே இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இது எங்களுக்கு மிகவும் திருப்தியளிக்கும் ஒரு வெற்றியாகும். நாங்கள் வசதியான நிலையில் தான் இருந்தோம், ஆனால் வானிலை காரணமாக போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்பதில் நிச்சயம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் வீரர்கள் அதற்கு தகுந்தவாறு செயல்பட்டனர்” என்றார்.









