தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி மகா சபை என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிட வசதியை வழங்குமாறு தமிழக அரசுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் அடிப்படையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் 2017 டிசம்பரில் தடை விதித்தது.
இது தொடர்பான வழக்கிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2025 ஆண்டு டிசம்பர் 15 அன்று, 2025 டிசம்பர் 15 அன்று, மாநிலத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயங்களை நிறுவுவது குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் கலந்தாலோசனை நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளை அமைக்கத் தேவையான நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்றும், மேலும் அந்தக் கலந்துரையாடல்களின் முடிவுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழிகாட்டுதல்களின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சமரசம் எட்டப்படவில்லை.அதனை தொடர்ந்து, இந்த திட்டம் தனது இருமொழிக் கொள்கையுடன் பொருந்தவில்லை என்று முந்தைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. அதில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இந்தி, ஆங்கிலம், மற்றும் மாநில மொழி ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், இது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது என்றும் எனவே நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைக்கக்கூடாது எனவும் தனது நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், நவோதயா பள்ளிகள் அமைப்பது விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (16-07-26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை 12 வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைவதை மாநில அரசு தடுப்பது ஏன்? தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியை ஏன் தடுக்கிறீர்கள்? தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது இந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுக்கிறது என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு நீதிபதி மகாதேவன், ‘தமிழ்நாடு இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள். மும்மொழி கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது, வேறு மொழியை கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு மும்மொழி கொள்கையை கொண்டு வருவதாகவும், சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பில் இருந்தே மூன்றாவது மொழி மட்டுமே கட்டாயமாகிறது என்றும் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து நீதிபதி நாகரத்னா, ‘இல்லை, அது மிகவும் மோசமானது. ஒன்பதாம் வகுப்பு மன அழுத்தமானது. ஒன்பதாம் வகுப்பில் ஏன் ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்துகிறீர்கள்? அதை ஆறாம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். மத்திய அரசு, தயவுசெய்து 9 ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியை வைக்காதீர்கள். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநிலப் பாடத்திட்டம் என 10 ஆம் வகுப்பு ஒரு பொதுத் தேர்வாகும். 8 ஆம் வகுப்பின் இறுதியிலிருந்து அழுத்தம் தொடங்குகிறது. எனவே 9-ஆம் வகுப்பில் ஒரு புதிய மொழியைத் தொடங்காதீர்கள். 6-ஆம் வகுப்பிலேயே தொடங்குங்கள்’ என்று கூறி நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு இடங்களை கண்டறிவது தொடர்பாக 3 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.







