கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்க முதல்வர் விஜய் கரூர் வரவிருக்கிறார்.
சுமார் 10 கிமீ ரோடு ஷோ பயணம் செய்யும் விஜய், கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பின் விஜய் கரூர் பக்கமே வரவில்லை. இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பின் முதல்வர் விஜய் கரூர் வருகிறார். இது அம்மாவட்ட மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 11 மணிக்கு விமானம் மூலமாக திருச்சி வரும் விஜய், பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் வருகிறார். அந்த வழி முழுவதும் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 10 கிமீ தூரத்திற்கு விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளார். இதன்பின் கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 6 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கான இருக்கை, தண்ணீர், ஸ்நாக்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் விஜய் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார்.
இதன்பின் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்குகிறார். அதுமட்டுமல்லாமல் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலமாக கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 13,500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை முடித்த பின் விஜய் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார். முதல்வர் விஜய்யின் கரூர் வருகையையொட்டி 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விஜய்யின் வாகனம் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.







