தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன்.இவர், தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பதவி வைத்து வருகிறார். இந்த நிலையில், வீடு புகுந்து தாக்கிய வழக்கு தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை ( ஜூலை 4) ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை எழில் நகர் பகுதியில் அமைச்சர் மரிய வில்சனின் சகோதரரான மரிய கிளோத் வீடு அமைந்துள்ளது. இவர்கள் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2022- ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள மரிய கிளோத் வீட்டுக்கு சென்ற அமைச்சர் மரிய வில்சன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக, அமைச்சரின் சகோதரர் மரிய கிளோத் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நாளை சனிக்கிழமை ( ஜூலை 4 ) கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி மாஜிஸ்திரேட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, அமைச்சர் மரிய வில்சன் நாளை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மரிய வில்சன் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. அந்த வீடியோவில், ஒருவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்து நபர்களை அமைச்சர் மரிய வில்சன் தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.







