காவல்துறை உயரதிகாரியும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமான ஏ. அருண் மீது சி.பி.ஐ விசாரணை கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒரு நபர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஐ.பி.எஸ் அதிகாரி அருண் குறித்து தெரிவித்த சில கருத்துகளின் அடிப்படையில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பணியாற்றிய காலத்தில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சியதாகவும், இதுகுறித்து உயர்நீதிமன்றம் முன்பே கடுமையான கருத்துகளை பதிவு செய்திருந்த நிலையிலும், அவர் மீது தமிழகஅரசு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக தொடர அனுமதித்திருப்பது நிர்வாகத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், சமூகத்தில் பின்தங்கிய, வறுமையின் காரணமாக நீதிமன்றத்தை அணுக முடியாத ஏழை, நலிவடைந்த மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் ஒரு புனிதமான கருவியே ‘பொதுநல வழக்கு’ (PIL). இதனைத் தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு தளமாக மாற்ற முடியாது.
மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில், தனிப்பட்ட பகைமையின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கை, பொதுநலன் என்ற போர்வையில் மறைக்க முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது மனுதாரருக்கு இருக்கும் தனிப்பட்ட கசப்பான உணர்வுகள் நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாகத் தெரிகிறது. இது மனுவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்று குறிப்பிட்டது.
மனுதாரர் குறிப்பிடும் முந்தைய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிலேயே, அந்த அதிகாரி மீது மனுதாரர் முன்வைத்துள்ள தீவிரமான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும், அவர்களுக்கு இடையிலான மோதல் பின்னணியும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை முழுமையான பொதுநல நோக்கம் கொண்டதாகவோ அல்லது உண்மையானதாகவோ கருத முடியாது. ஆகவே, இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







