இரட்டை நிலநடுக்கம்.. சீட்டு கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்… பலி எண்ணிக்கை 1 லட்சம்?

வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. வெறும் சில நொடிகளில் தாக்கும் நிலநடுக்கத்தால் மிக மோசமான ஒரு பேரழிவு ஏற்படுகிறது. அப்படியொரு பேரழிவு தான் இப்போது தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் ஏற்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்டில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. முதலில் நாட்டின் 7.2 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் தாக்கிய சில வினாடிகளிலேயே, தலைநகர் கராகஸை 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கங்களால் தலைநகரம் முழுவதும் பெரும் பீதியும் குழப்பமும் நிலவியது.

மக்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குள் கட்டடங்கள் இடிந்து விழத் தொடங்கின, மின்சார இணைப்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு பெரும் இருள் சூழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம் குறித்து கராகஸ் நகரைச் சேர்ந்த 54 வயதான வங்கி ஊழியர் ஓடலிஸ் எஸ்கலோனா கூறுகையில், “எல்லாமே ஒரே நிமிடத்தில் மாறிவிட்டது. படிக்கட்டுகள் சரிந்து விழுந்தன. சுவர்கள் முழுவதும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தன. அது மிகவும் பயங்கரமாக இருந்தது” என்றார்.

நிலநடுக்கத்தின் தீவிரத்தால் வெனிசுலாவின் மிக முக்கியமான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த புகையால் சூழ்ந்தது. நிலநடுக்கத்தின் போது அங்கிருந்த பயணிகள் பீதியில் அலறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சிலர் அங்கிருந்த மேஜைகளுக்கு அடியில் தஞ்சம் புகுந்து உயிர் பிழைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த மோசமான நிலநடுக்கத்தால் மிக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் மிக அதிக அளவிலான உயிரிழப்புகளும், கடுமையான உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 1,00,000 வரை இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.கடலோர நகரமான மொரோனுக்கு மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 21.9 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, வெறும் 39 வினாடிகளில் அதிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டாவது நிலநடுக்கமும் தாக்கியது. அதன் பிறகும் கூட சுமார் 20 நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.