மத்தியக் கிழக்குப் பகுதியில் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் திடீரென சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
போர் நிறுத்தம் அமலில் இருந்த சூழலில், திடீரென இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் காரணமாக மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடைக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியைக் குறிவைத்து ஈரான் அதிரடியாகப் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட் நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்த நேரடித் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளதால், அப்பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, அந்நாட்டின் வடக்குப் பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை சைரன்கள் பயங்கரச் சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கின. இதனால் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்புப் பங்கர்களுக்கு ஓடினர்..
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ், “ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கிக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை எங்களது ராணுவம் கண்டறிந்துள்ளது. இந்த அச்சுறுத்தலை நடுவானிலேயே முறியடிப்பதற்காக எங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் முழு வீச்சில் இயக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்புப் பிரிவினர் அளித்த கூடுதல் தகவலின்படி, ஈரானால் வட இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட இரண்டு முக்கியப் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் நடுவானிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன. இந்த நள்ளிரவு வான்வழித் தாக்குதலால் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகளோ அல்லது கட்டடச் சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு முக்கியப் பின்னணி உள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
ஹிஸ்புல்லா அமைப்பின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் தஹியே என்ற பகுதியைச் சிதைக்கும் வகையில் இஸ்ரேலின் இந்த வான்வழித் தாக்குதல்கள் அமைந்திருந்தன. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, ஏப்ரல் 8 போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏற்கனவே அமைதியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த மத்திய கிழக்குக் களம், இந்த நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதல்களால் மீண்டும் ஒரு பெரிய ராணுவ மோதலை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.








