திமுக, அதிமுக, தவெகவை எப்படி பார்க்கிறேனோ அதுபோல் தான் பாஜகவையும் பார்ப்பேன் – அண்ணாமலை அதிரடி

ஆனந்தமாகவும், அன்போடும் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். பாஜகவின் ஒரு விஷயத்தை Disagree செய்கிறோம் என்றால் அதனை கம்பீரமாக மேற்கொள்வோம்.

எப்படி திமுகவை பார்க்கிறோமோ, அதிமுக, தவெகவை பார்க்கிறோமோ அப்படித்தனா் பாஜகவையும் பார்ப்பேன். அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்த போகிறார்கள். நம்முடைய இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்த போகிறோம்” என்று பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கி உள்ள அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை இன்று இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசினார். அப்போது புதிதாக அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

www.wearetheleader.org தளத்தில் தொண்டர்கள் இணையலாம். இந்த இயக்கத்தில் அரசியல் சார்ந்து பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்படும். வரும் பொதுத்தேர்தலில் கட்சி நிச்சயம் போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்தார்.

இந்த வேளையில் லைவில் ஒருவர், ”உங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, ”பிரதமர் மோடி.. நம்முடைய பிரதமர் மோடி.. அந்த கவுரவம் இருக்கும். ஆனால் பாஜகவில் இருந்து ஒரு விஷயத்தை Disagree செய்கிறோம் என்றால் அதனை கம்பீரமாக மேற்கொள்வோம். மும்மொழி கொள்கை ‘டைம் டேபிளில்’ சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 2029ம் ஆண்டில் தான் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை என்றனர். அதற்காக நான் குரல் கொடுத்தேன். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எதிர்ப்பதற்காகவே நம்முடைய அரசியல் கிடையாது.

எப்படி திமுகவை பார்க்கிறோமோ, அதிமுகவை பார்க்கிறோமோ, எப்படி தவெகவை பார்க்கிறோமோ, எப்படி அண்ணன் சீமானை பார்க்கிறோமோ, அன்புமணி, ஜிகே வாசன், ஏசி சண்முகம், பாரி வேந்தர், ஜான்பாண்டியன், பிரேமலதா, கிருஷ்ணசாமி, வைகோ உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களை பார்க்கிறோமோ பாஜகவையும் அப்படித்தான் பார்ப்பேன். அதற்காக வன்மம் எதுவும் கிடையாது. அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்த போகிறார்கள். நம்முடைய இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்த போகிறோம். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. தரம் பார்த்து மக்கள் நம்மை தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் நிற்கிறோம்” என்றார்.இதன்மூலம் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் பாஜகவை எதிர்க்க அண்ணாமலை தயாராகிவிட்டதாகவும், வரும் காலத்தில் திமுக, அதிமுகவை போல் பாஜகவையும் அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கான சமிக்ஞையை கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.