வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு

நாடு முழுவதும் 19 கிலோ கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.42 முதல் ரூ.53.50 வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் சிலிண்டருக்கு ரூ.46 உயர்ந்து ரூ.3,283 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காஸ் சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி திடீரென வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.990 முதல் ரூ.1000 வரை அதிகரித்தது. இந்த அதிரடியான விலை உயர்வு நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மார்ச் மாதத்தில் இருந்து ஒரே நிலையில் நீடிக்கிறது. அதன்படி டெல்லியில் ரூ.913, மும்பையில் ரூ.912.50, கொல்கத்தாவில் ரூ.939, சென்னையில் ரூ.928.50, சேலத்தில் ரூ.946.50 என விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஜூன்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.42 முதல் ரூ.53.50 வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் சென்னையில் ரூ.3,237 ஆக இருந்த நிலையில் நேற்று ரூ.46 உயர்ந்து ரூ.3,283 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், சேலத்தில் ரூ.3,186 ஆக இருந்தது, நேற்று ரூ.45.50 உயர்ந்து ரூ.3,231.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவே டெல்லியில் ரூ.3,113.50, கொல்கத்தாவில் ரூ.3,255.50, மும்பையில் ரூ.3,067, பெங்களூரில் ரூ.3,198 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான எந்தவித இறுதி முடிவும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, காஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.