இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதைப் போல விரைவில் டீசலுடன் ‘ஐசோபியூட்டனால்’ என்ற புதிய அதிநவீன பயோ எரிபொருளைக் கட்டாயமாகக் கலந்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டாலும், அதை டீசலுடன் கலப்பதில் எரியும் வெப்பநிலை குறைவு மற்றும் இன்ஜின் அரிப்பு போன்ற பல பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், நான்கு கார்பன் அணுக்களைக் கொண்ட ஐசோபியூட்டனால் டீசலுடன் நன்றாகக் கலக்கக்கூடியது, அதிக எரிசக்தி கொண்டது மற்றும் இன்ஜின்களை அரிக்காதது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இது குறித்து நடத்திய ஆராய்ச்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளதால், மத்திய அரசின் கட்டாயக் கலப்பு விதிகள் அமலுக்கு வந்தவுடன் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐசோபியூட்டனால் கலப்பைத் தொடங்கவுள்ளன.








