மெரிட் அடைப்படையில் மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நீதித்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நியமனங்களில் தகுதி மற்றும் மெரிட் முறை மட்டுமே முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும், எந்த இடத்திலும் லஞ்சம் இல்லாத வகையில் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனம் இருக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

நீதிமன்றங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்குத் தங்கு தடையின்றி நீதி கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே அரசு செயல்படும் என்றும் அவர் விளக்கினார். மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் முறையாக இருக்கும் என்றும், மெரிட் அடிப்படையிலான இந்த நியமனங்களுக்காகப் பல்வேறு தரப்பினர் தங்களைப் பாராட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் உயர் பதவிகளுக்காகப் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு இருந்தது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயன்றதாலேயே அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது என்றார். எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை போனதால் தான் பலரும் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், த.வெ.க. ஆட்சியில் அரசுப்பணி நியமனங்களுக்காக ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது என்று உறுதியளித்தார். மேகதாது விவகாரத்தில் அணை கட்டுவதை சட்டப்பூர்வமாகத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.தற்போது தோழமைக் கட்சியினரின் ஆதரவுடன் த.வெ.க. அரசு முழு பலத்துடன் இருக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல்குமார், இதனால் த.வெ.க.வுக்கு யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.