18 குவாரிகளை இழுத்து மூடிய அமைச்சர்

மிழகத்தில் விஜய்யின் த.வெ.க ஆட்சி அமைத்ததில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் விஜய் சமீபத்தில் கோவில், பள்ளி அருகில் உள்ள 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்திருந்தார். அது தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தற்போது முறைகேடுகள் நடக்கும் குவாரிகள் மீது தமிழக அரசு பார்வை திரும்பி உள்ளது. தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனிமவள லாரிகள், கேரள மாநிலத்திற்கு சென்று வந்துள்ளன. இதில், முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், கனிம வளத்துறை அமைச்சர் பிரபு திடீரென சோதனையில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.கேரளா செல்லும் லாரிகள் மற்றும் அனுமதி பாஸ்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே தென்காசி மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோருக்கு பல புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது உத்தரவின் பேரில், கனிமவளத்துறையினர் நடத்திய ஆய்வில் 54 கல் குவாரிகளில் 18 கல் குவாரிகளில் முறைகேடு நடப்பது தெரியவந்துள்ளது. அந்த 18 குவாரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விரிவான ஆய்வுக்கு பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமவளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.